இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறும்?
வேலைக்குச் செல்வது வருங்காலத்தில் கட்டாயமான ஒன்றாக இருக்காது; மாறாக, ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலாகிவிடும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்கள் இதோ:
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாட்காஸ்ட்களில் ஒன்றாக விளங்குவது Zerodha நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF is?’ என்ற நிகழ்ச்சி. இந்த மேடையில் பல முக்கியமான தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் சமீபத்திய அத்தியாயத்தில் எலான் மஸ்க் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலான உரையாடலில், எதிர்கால வேலை வாய்ப்புகள், அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள், H-1B விசா, டிரம்பின் வரி விதிப்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி போன்ற பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து மஸ்க் முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக திறமையான இந்தியர்களை அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அமெரிக்கா மிகுந்த நன்மை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேசமயம் இன்றும் பல முக்கிய துறைகளில் தேவையான திறமையான நபர்களை கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டு நபர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டு குறித்து மஸ்க், அது எவ்வளவு உண்மை எனத் தெரியாது எனவும், சில காரணிகளால் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், H-1B திட்டத்தை முழுவதும் ரத்து செய்வதில் தான் சம்மதமில்லை என்றும் தெரிவித்தார்.
ட்ரம்ப் அதிக வரிகள் விதிக்க விரும்பினார்; அதைத் தடுக்க முயன்றேன் ஆனால் அந்த யோசனை வெற்றியடையவில்லை என்றும் மஸ்க் பகிர்ந்தார். இந்தியாவுக்கு 50% வரி விதிப்பது தவறானது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்நிகழ்ச்சியில் மிக முக்கியமாக அவர் சொல்லியது –
“அடுத்த 20 ஆண்டுகளில் மனிதர்களுக்குச் செய்யவேண்டிய வேலைகள் மிகக் குறையும்; AI பெரும்பாலான பணிகளையும் மேற்கொண்டு விடும். அதனால் பெரிய நகரங்களில் வேலைக்காக குடிபெயர வேண்டிய அவசியமே இருக்காது.”
வேலை என்பது இனி ஒரு கட்டாயம் அல்ல; விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்படும் தனிநபர் தேர்வாக மாறும் என அவர் கணித்துள்ளார்.
இளம் இந்திய தொழில் முனைவோருக்கான தனது அறிவுரையில், பணத்தை நோக்கி ஓடுவதற்குப் பதிலாக, மக்களுக்கு உண்மையில் பயனளிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும் என மஸ்க் கூறினார். அப்படி மதிப்பை உருவாக்கும் போது செல்வம் தானாகவே நம்மை தேடி வரும் எனும் அவரது கருத்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உண்மையான வெற்றி என்பது சம்பாதித்த பணத்தை சமூக நலனுக்காக மீண்டும் பயன்படுத்துவதில் இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
நிகில் காமத் மற்றும் எலான் மஸ்க் இடையேயான இந்தப் பாட்காஸ்ட் உரையாடல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்புகளின் எதிர்காலம், மனித குலத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து மக்களுக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.