அதிரவைக்கும் அகமதாபாத் – நாட்டின் முதல் 16-அடுக்கு ரயில் நிலையம் உருவாகிறது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 16 தளங்களை கொண்ட மிகப்பெரிய, அதிநவீன ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. 2027ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த கட்டிடம், போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லலாம்.
ஒரு மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டை எடுத்துக் கூறும்போது, குஜராத் மாடலை தவிர்த்து நினைப்பதே கடினம். காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சிக்குப் பின் பாஜக தொடர்ந்து ஆட்சி பிடித்ததற்கான அடித்தளங்களில் ஒன்றாகவும் இந்த குஜராத் மாடல் கருதப்படுகிறது. அந்த வரிசையில், நாட்டையே வியக்கச் செய்யும் புதிய கட்டமைப்பு திட்டமாக இந்த ரயில் நிலையம் உருவாகிறது.
பொதுவாக பெரிய ரயில் நிலையங்களில் 12 அல்லது 13 பிளாட்பார்ம்களே இருக்கும். ஆனால், அகமதாபாத்தின் புதிய ரயில் நிலையம் 16 முழு தளங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுவது தனித்துவம் சேர்க்கிறது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் – இது வெறும் ரயில்கள் மட்டுமின்றி, மெட்ரோ சேவை, பஸ்கள் போன்ற பல்வேறு போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்பட வேண்டும் என்பதுதான்.
இதற்காக பரந்த பரப்பளவில் பார்க்கிங் வசதி, அதிநவீன காத்திருப்பு அறைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சேர்க்கப்படும். மேலும், மும்பை – அகமதாபாத் புல்லட் ரயிலுக்கான இணைப்பையும் கருத்தில் கொண்டு இந்த கட்டிடம் வடிவமைக்கப்படுகிறது. ஜப்பானின் உதவியுடன் 508 கிலோமீட்டர் தொலைவில் புல்லட் ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பயணிகள் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அகமதாபாதின் உலகப் புகழ் பெற்ற பட்டம் பறக்கும் திருவிழாவை பிரதிபலிக்கும் வகையில், ரயில் நிலையத்தின் வெளிப்புற வடிவமைப்பில் பல காத்தாடிகள் ஒரே நீளத்தில் உயர்வாக பறந்துபோல் காணப்படும் ஒரு தனித்துவமான வடிவமைப்பு இடம்பெறுகிறது. இது பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2027ஆம் ஆண்டில் திறக்கப்படும் இந்த மாபெரும் போக்குவரத்து மையம், ரயில் – மெட்ரோ – பேருந்து சேவைகளை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் முதல் இந்திய ரயில் நிலையமாக திகழும். மாநிலத்திற்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் இது பெரும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழா குறித்த ஆர்வம் ஏற்கெனவே பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.