சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்!
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் ஏறத்தாழ 53 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். டெலிகிராம் பயன்பாட்டாளர்கள் சுமார் 8 கோடி பேர். சிக்னல், ஸ்னாப்சாட், ஷேர்சாட், அறட்டை, ஜோஷ் போன்ற மற்ற செயலிகளின் பயனர்களையும் சேர்த்து கணக்கிட்டால், மொத்தம் 100 கோடியை கடந்துவிடுகிறது.
இவ்வளவு பெரும் பயனர் எண்ணிக்கை, இணையத்தளம் மூலம் மோசடி செய்ய முயலும் குழுக்களுக்கு முக்கியமான ஆதரவாக மாறியுள்ளது. வீட்டிலிருந்தபடியே கோடிக்கணக்கில் மோசடி செய்ய இந்த செயலிகள் வழிவகை செய்து வருகின்றன.
உதாரணமாக, வாட்ஸ்அப்பில் புதிய கணக்கை உருவாக்க சிம் கார்டு ஒன்று இருந்தால் போதும். அதில் வரும் ஒரே ஒரு OTP மூலம் கணக்கை தொடங்க முடியும். பின்னர் அந்த சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயமோ, அதைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, பல சைபர் குற்றவாளிகள் கணக்கை தொடங்கி விட்டதும் சிம் கார்டுகளை அகற்றிவிடுகின்றனர். இதனால், அவர்களை அடையாளம் காண்பது பல நேரங்களில் மிகவும் கடினமாகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளைப் பயன்படுத்த சிம் கார்டு கட்டாயமாக செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இதோடு, தற்போது சிம் கார்டு இல்லாத போன்களிலும், Wi-Fi இணைப்பை பயன்படுத்தி ஆப்களை இயக்குவது சாத்தியமாக இருக்கிறது. ஆனால், புதிய விதிமுறை இந்த வசதிக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் இன்னொரு அம்சம், கம்ப்யூட்டரில் அதை பயன்படுத்த முடியும் என்பது. ஆனால் இது கூட மோசடி செய்பவர்களுக்கு உதவியாக மாறியதால், இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி கணினியில் வாட்ஸ்அப்பை திறந்தால், அது அதிகபட்சம் 6 மணி நேரம் மட்டுமே செயல்படும். பின்னர் அது தானாகவே லாக்அவுட் ஆகி விடும். தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு 6 மணிநேரத்திலும் மீண்டும் லாக்இன் செய்ய வேண்டும்.
ஜிபே, போன்பே போன்ற நிதி செயலிகளிலும், வங்கி ஆப்களிலும் ஏற்கனவே பயன்படுத்தப்படும் சிம்–பைண்டிங் முறையை, இப்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகளிலும் கொண்டு வர உள்ளனர். இத்தகைய மாற்றங்கள் இணையதள மோசடிகளை கணிசமாகக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய விதிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.