ஆன்லைன் டிக்கெட் தவிர்ப்போர் பம்பைக்கு செல்ல முடியாது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு
ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் பம்பை நோக்கிச் செல்ல அனுமதி வழங்கப்படாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெளிவுபடுத்தியுள்ளது.
மண்டல காலமும் மகர விளக்கு பருவமும் தொடங்கியதை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளிலிருந்தே பக்தர்கள் பெரும்பான்மையாக திரண்டதால் பலர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் இடைவழியில் இருந்து மீண்டும் ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்பாட் புக்கிங் வசதி 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பம்பை நோக்கிச் செல்ல முடியும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் இல்லாமல் நிலக்கல்லுக்கு வந்து சேர்ந்தோர் அங்கிருந்தே பம்பைக்கு செல்ல முடியாது. தேவையெனில், பக்தர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கூட்டநெரிசலை மேலும் குறைப்பதற்காக பம்பை, எருமேலி, செங்கனூர் போன்ற இடங்களில் இருந்த உடனடி முன்பதிவு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.