இந்திய முப்படைகளை அதிநவீனப்படுத்தும் மத்திய அரசு – S-400 அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா முனைப்பு!
தேச பாதுகாப்பை உயர்த்துவது என்ற இலக்குடன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முப்படைகளின் நவீனமயத்துக்கு அதிவேகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் பகுதியாக, ரஷ்யாவின் S-400 வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் புதிய ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியா மேலும் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா உருவாக்கிய S-400 என்பது நிலத்திலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக சுட்டுத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு. 2018 ஆம் ஆண்டு இந்தியா, சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து S-400 அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது.
அந்நேரம், அமெரிக்காவின் CAATSA சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு தடைகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், பிற்பாடு அது தவிர்க்கப்பட்டது. மாறாக, 2022 ஜூலை 22 அன்று, ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியாவுக்கு “சிறப்பு விலக்கு” வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது.
ஏற்கனவே நான்கு S-400 அமைப்புகள் இந்திய விமானப்படையில் பணியில் இணைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் போரின் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தால், மீதமுள்ள ஐந்தாவது S-400 அமைப்பு இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், S-400 அமைப்பு உலக கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்களையும் ஒரு உளவு விமானத்தையும் 300 கி.மீ தூரத்திலேயே நடுவானில் சுட்டு வீழ்த்தி S-400 தனது திறனை நிரூபித்தது.
இந்நிலையில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஐந்து S-400 அமைப்புகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 120, 200, 250 மற்றும் 380 கி.மீ தூரம் வரை இடைமறிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அடங்கும். பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் சேவை மையங்களை இந்தியாவிலேயே அமைக்க ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடமிருந்து S-500 அமைப்புகளையும், கடற்படை பயன்பாட்டுக்காக சுகோய்-30MKI மற்றும் ஐந்தாம் தலைமுறை சுகோய்-57 போர் விமானங்களையும், மொத்தம் 63,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்காவுடனும் இந்தியா தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், கடந்த அக்டோபர் 31 அன்று புதிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. தேஜஸ் போர் விமானங்களுக்கான ஜெனரல் எலக்ட்ரிக் என்ஜின்களுக்காக 8,900 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் முடிவுற்றுள்ளது.
இந்திய கடற்படைக்கு வாங்கப்பட உள்ள 24 MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கு தேவையான “தொடர் ஆதரவு தொகுப்பு”க்காக கூடுதலாக 7,000 கோடி ரூபாயை மத்திய ராணுவ தளவாட கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
2035க்குள் இந்தியா தானே உருவாக்கும் உள்நாட்டு ஸ்டெல்த் மேம்பட்ட நடுத்தர போர் விமானத் திட்டமும் நடைபெற்று வருவதால், அதற்கு முன்னதாகவே முப்படைகளை அதிநவீனப்படுத்த மத்திய அரசு துரிதப்படுத்தி செயல்பட்டு வருகிறது.