ஒரே நாடு, ஒரே நேர தேர்தல் நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையத்தை அழைத்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பொதுத்தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே காலகட்டத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு புதிய தேர்தல் வடிவமைப்பை முன்னெடுத்து வருகிறது.
இதனைச் சுற்றி சட்ட அறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதித்துறை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கருத்துக்களை குழு தொடர்ந்து சேகரித்து வருகிறது.
இந்தப் பின்னணியில், தேர்தல்களை நடத்தும் பொறுப்பை வகிக்கும் தலைமை தேர்தல் ஆணையருடனும் நேரடியாக ஆலோசிக்க குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி வரும் மாதம் 4ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற ஆணையர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் முடிவில், “ஒரே நாடு – ஒரே தேர்தல்” முறையில் தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லை மற்றும் பங்கை குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.