எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கிய கட்டமாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்தியாவின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனம் — இந்திரஜால் ரேஞ்சர் — அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு–காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நுழைவை தடுக்க பாதுகாப்புப்படையினர் கடந்த மாதங்களில் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இவ்வாறான சூழலில், ட்ரோன் அச்சுறுத்தல்களை மிக வேகமாக தடுக்க உதவும் மொபைல் வகை ட்ரோன்-எதிர்ப்பு அமைப்பை வடிவமைத்து, இந்தியாவின் இந்திரஜால் ட்ரோன் டிஃபென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சிஸ்டத்துடன் இயங்கும் இந்த வாகனத்துக்கு இந்திரஜால் ரேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாதாரணமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஒரு இடத்தில் நிலையாக செயல்படுகின்றன. ஆனால் ரேஞ்சர் வாகனம் எங்கு வேண்டுமானாலும் இயக்கக்கூடிய, அனைத்து தரைப்பரப்புகளிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரும் நிலையிலேயே எதிரிகளின் ட்ரோன்களை கண்டறிந்து, அவற்றை பின்தொடர்ந்து, உடனடியாக தகர்க்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.
இதில் உள்ள ஏ.ஐ. சிஸ்டம், அச்சுறுத்தல்களை தானாக மதிப்பீடு செய்து, இலக்குகளை மிக வேகமாக இடைமறித்து செயலிழக்கச் செய்யும் திறனும் கொண்டுள்ளது.
அந்தரங்க எல்லைத் தாண்டி வரும் ட்ரோன் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நேரத்தில், இந்திரஜால் ரேஞ்சர் வாகனத்தின் பயன்பாடு பாதுகாப்புப் படைகளின் சக்தியை பெரிதும் உயர்த்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.