அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண்ணிடம் சீன அதிகாரிகள் காட்டிய தவறான நடத்தை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத, முழுமையான பகுதியாகும்; சீனா எவ்வளவு மறுப்புகளைச் செய்தாலும் இந்த உண்மையை மாற்ற முடியாது என்று இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான செய்தி:
இந்தியா–சீனா எல்லை பிரச்சனை பல தசாப்தங்களாகவே நீடித்து வருகிறது. லடாக்கைச் சேர்ந்த சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தையும் “தெற்கு திபெத்” எனக் குறிப்பிடும் நிலைப்பாட்டில் உள்ளது. இந்த சூழலில், இந்தியப் பாஸ்போர்ட் கொண்ட அருணாச்சலப் பிரதேச பெண்ணை, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 18 மணிநேரம் தடுத்து வைத்து சீன அதிகாரிகள் துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 21 அன்று, லண்டனில் இருந்து ஜப்பான் பயணம் செய்யும் வழியில் சீனாவில் இடைநிறுத்தம் (டிரான்சிட்) செய்யப்பட்டபோது, “இந்தியப் பாஸ்போர்ட் செல்லாது” என கூறி தன்னை தடுத்து வைத்தனர் என்று பெமா வாங் தாங் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் போது ‘இந்தியா, இந்தியா’ என்று கத்திக் கொண்டே தன்னை தனியாக அழைத்துச் சென்றதாகவும், அருணாச்சலப் பிரதேசம் என்பதால் பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டும் இதே ஷாங்காய் வழியாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்ததாகவும், இந்த முறை கிளம்பும் முன் லண்டனிலுள்ள சீன தூதரகத்திடமும் “பிரச்னை எதுவும் இருக்காது” என்ற உறுதிப்படுத்தலை பெற்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணை செய்யும் வேளையில், சீன குடியேற்ற அதிகாரிகளும் China Eastern Airlines பணியாளர்களும் அவமானப்படுத்தியதாகவும், “சீனப் பாஸ்போர்ட் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று வற்புறுத்தினர் என்றும் கூறினார். மேலும், சரியான விளக்கம், உணவு, விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்தும் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டதாகவும் கூறினார்.
தம்மிடம் இருந்து தொடர்பு கொள்ள முடியாததால், இங்கிலாந்திலிருந்த நண்பர் ஒருவர் ஷாங்காய் இந்திய தூதரகத்துடன் இணைத்ததாகவும், பின்னர் இந்திய தூதரகம் தங்களை பாதுகாப்பாக ஜப்பான் செல்ல ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். தன்னை ஆன்லைனில் குற்றம் சாட்டுபவர்களை கண்டித்த அவர், இந்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் தனிப்பட்ட நலனுக்காக இல்லை; இந்தியர்களின் மரியாதைக்காகவே எனவும் வலியுறுத்தினார்.
எக்ஸ் தளத்தில் தாம் இல்லை என்றாலும், தன்னுக்காக ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைக் குறித்து சீன வெளியுறவுத்துறை கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பெண்ணை விமான நிலையத்தில் தடுத்தது குறித்து சீன அரசிடம் இந்தியா நேரடியாக பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளையும், 24 மணி நேர விசா இல்லா இடைநிறுத்த பயணத்தை அனுமதிக்கும் சீனாவின் சொந்த விதிகளையும் மீறும் வகையில் நடந்துள்ளது சீன அதிகாரிகளின் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.