பெண்கள் மீது நடைபெறும் வன்முறை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவரை கொலை செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது. சராசரியாக தினமும் 137 பெண்கள் உயிரிழக்கின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 83,000 பெண்களும் இளம் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதில் சுமார் 50,000 பேர் அவர்களது பெற்றோர், சகோதரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று ஐ.நா கூறியுள்ளது.
இந்தக் கொலைகளுக்கான முக்கியமான காரணமாக பாலின சமத்துவமின்மையே முதன்மையாக உள்ளது என்று ஐ.நா விளக்கியுள்ளது. அதோடு, இடம்பெயர்வு, பொருளாதார நிலை தடுமாற்றம், பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனம், இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் உருவாகும் பிரச்சினைகள் ஆகியவை கூடுதல் காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
2024இல் ஆப்பிரிக்கா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் நிகழ்ந்துள்ளன. அங்கு மட்டும் 22,600 பெண்கள் பாதிக்கப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.