எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு 10 மணிக்குள் இந்த சாம்பல் இந்தியாவை அடையும் எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு எத்தியோப்பியாவில், சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எரிமலை கடந்த 23 ஆம் தேதி வெடித்தது. நீண்ட நேரம் வெடித்து சிதறிய காரணமாக வெளியேற்றப்பட்ட சாம்பல் மேகங்களை பூரணமாக சூழ்ந்தது.
இத்தகைய சாம்பல் மேகங்கள் குஜராத்தின் மேற்கு பகுதிகளுக்கு நுழைந்து, ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் வழியாக பரவி வருகின்றன. இதனால் இமயமலை பகுதிகள் மற்றும் அருகிலுள்ள பகுதியை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியா நோக்கி பரவும் இந்த சாம்பல், மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து, 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குள் இந்தியா முழுவதையும் சூழும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை வழங்கியுள்ளது.
இதையொட்டி, மத்திய கிழக்கு விமானப் பாதையில் விமான சேவை சாம்பலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம், அந்தப் பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், நிலைமை முழுமையாக சீராகும் வரை விமான போக்குவரத்தை பாதுகாப்பாக நிர்வகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.