₹4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம் — இந்தியா–இங்கிலாந்து இடையே உடன்படிக்கை
இந்திய ராணுவம், இங்கிலாந்து நிறுவனத்துடன் ரூ.4,100 கோடி மதிப்பிலான இலகு ரக பன்முக ஏவுகணை (Lightweight Multirole Missile – LMM) வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் சமீபத்தில் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன. அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் தாலஸ் குழுமம் மற்றும் இந்திய ராணுவம் இடையே இந்த ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் படி, தாலஸ் நிறுவனம் 8 லாஞ்சர்கள் மற்றும் 50 எல்எம்எம்கள் (LMMs) வழங்க உள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதோடு, ‘சுயசார்பு இந்தியா’ இலக்கை அடைவதற்கும் உதவும். இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு துறையின் நீண்டகால ஒத்துழைப்பையும் இது வலுப்படுத்தும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலே கூறியதாவது: “இந்த ஒப்பந்தம், இந்தியாவுடன் வளர்ந்து வரும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது இரு நாடுகளுக்கும் பாதுகாப்புத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார்.
13 கிலோ எடையுள்ள இலகுரக இந்த ஏவுகணை, லேசர் கதிர் வழிகாட்டி முறையில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 6 கி.மீ. தூரத்திலிருந்தும் எதிரி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தும் திறனும் உடையது. மேலும், மலைப்பகுதிகளிலும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.