எத்தியோப்பியாவின் Hayli Gubbi (ஹெய்லி குப்பி) எரிமலை வெடித்து எழுப்பிய பெருமளவு சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளைக் குறிவைத்து விரைவாகப் பரவி வருகிறது. இந்த வெடிப்பின் தாக்கம் இந்தியாவில் எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்போம்.
எத்தியோப்பியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, நீண்ட காலம் செயலற்ற நிலையில் இருந்தது. சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின், நவம்பர் 23ஆம் தேதி திடீரென வெடித்தது. 14 கிலோமீட்டர் உயரம் வரை தூக்கி எறியப்பட்ட சாம்பலை, ஏமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளிலிருந்தே காண முடிந்தது.
இந்த வெடிப்பு, 6,000 கிலோமீட்டர் தூரத்திலும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஹவாயின் மவுனா லோவா போன்று கேடயம் வடிவில் உள்ள இந்த எரிமலையின் உச்சியில் இருந்து பெருமளவில் சாம்பல் பீறிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், அடர்ந்த சாம்பல் பகுதி முழுவதையும் மூடி வானத்தை இருண்டதுபோல மாற்றியது. இந்த சாம்பல் மேகம் சிவப்பு கடலைத் தாண்டி ஏமன், ஓமன் நாடுகள் வழியாக, வட அரேபிய கடல் பகுதியை கடந்து இறுதியாக இந்தியாவை வந்தடைந்துள்ளது.
IndiaMetSky Weather வெளியிட்ட தகவலின்படி, இந்த சாம்பல் மேகம் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு திசையிலும் நகர்கிறது. சுமார் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் சாம்பல் பரவுவதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தனர்.
மேற்கு ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் ஏற்கனவே சாம்பல் பரவியுள்ளது. மேலும், இது குஜராத் வழியாக மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் இமயமலைத் தொடரின் மாற்றுத் தென்பகுதிகளுக்கு நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எரிமலைச் சாம்பலில் உள்ள சல்பர் டைஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் விமானச் சேவைகளுக்கு ஆபத்தானவை. இதனால், கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல் பகுதி மற்றும் வளைகுடா நாடுகளின் பல விமான வழித்தடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் துலூஸில் உள்ள எரிமலைச் சாம்பல் ஆலோசனை மையம் கூடிய பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது என DGCA தெரிவித்துள்ளது.
விமானங்கள் சாம்பல் பாதித்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும், அவசியமெனில் வழித்தடம் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. கேபினில் புகை தென்பட்டாலும் உடனடியாக தகவல் அளிக்குமாறு விமானிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலைத் தரவுகளை தொடர்ந்து கண்காணிக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வடஇந்திய மாநிலங்கள் கடுமையான காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த எரிமலை சாம்பல் சூழ்நிலையை மேலும் மோசமாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.