அயோத்தி ராமர் ஆலயத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடி, இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் ஆலயத்தில் காவிக்கொடியை ஏற்றிய பின்னர் அவர் உரையாற்றினார்.
ராமர் ஆலய கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு, இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ராம பக்தியின் பேரொளி பரவி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
அயோத்தியில் காவிக்கொடி உயர்த்தப்பட்டது என்பது வரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு தருணம் என்றும், அந்தக் கொடி இந்தியாவின் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் ஒரு சின்னம் என்றும் மோடி விளக்கினார்.
ராமரின் கொடி “சத்தியமே இறுதியில் வெற்றி பெறும்” என்ற செய்தியைத் தருகிறது என அவர் கூறினார். காவி நிறக் கொடி ஒற்றுமை, ஆன்மீகம் மற்றும் உயர் நெறியை உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டில் அயோத்தி உலக மனிதகுலத்திற்கான புதிய முன்னேற்றம் மற்றும் மாற்றத்தின் மையமாக உருவெடுத்து வருகிறது; தற்போது அயோத்தியின் வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
ராமர் ஆலயத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தொழிலாளர்கள், பின்தங்கிய சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறிய மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவரின் பங்களிப்பாலும் முன்னேர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.