எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து, சிதறிய உலோகங்களும், சாம்பலும் ஆசியப் பகுதிகளுக்கு பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்த எரிமலை முன் எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் வெடிப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை, வெடிப்பின் போது 14 கி.மீ உயரம் வரை புகையும் சாம்பலும் கலந்த மேகங்களை வானில் தூக்கியது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஏமன், ஓமன், இந்தியா, வடக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், ஹெய்லி குப்லி எரிமலை சீனாவின் வானிலையையும் மாசுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை திடீரென வெடிப்பது, நீண்ட காலம் அமைதியாக இருக்கும் எரிமலைகள் கூட மீண்டும் செயல்படக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
விஞ்ஞானிகள் கூறுவதன்படி, ஹெய்லி குப்லி எரிமலையின் மீண்டும் செயல்படுவதற்கு காரணம் அதன் மேக்மா பகுதியில் ஏற்பட்ட மாற்றம். உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் படிகங்கள் குவியுமிடத்தில் நிலத்தடி நீர்த்தேக்கம் மாற்றம் அடைந்ததாலே புதிய வெப்பமான மேக்மா உள்ளே நுழைந்து உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த அழுத்தம் சுற்றியுள்ள பாறைகளை உடைத்து, வெடிப்பைத் தூண்டும் போது தீவிரமான வெடிப்பு நிகழ்கிறது.
மேலும், விஞ்ஞானிகள் இதற்குப் பல கூடுதல் காரணங்களும் பங்களித்திருக்கலாம் என குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு, செயலற்றதுபோல் தோன்றும் எரிமலைகள் கூட சரியான புவியியல் தூண்டுதல்களின் காரணமாக மீண்டும் வெடிக்கக் கூடியவை என்பதைக் காட்டுகிறது.