நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக சரணடையத் தயாராக இருப்பதாக பல மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நக்சல் பிரச்சினையை முழுமையாக ஒழிப்போம் என்று மத்திய அரசு உறுதி தெரிவித்துள்ள நிலையில், கடந்த ஒன்றாண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல் உறுப்பினர்கள் பிடியாணையில் சிக்கினர்.
சமீபத்தில் ஆந்திரா – சத்தீஸ்கர் – தெலங்கானா மாநில எல்லை பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையில், மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பல முக்கிய நக்சல் தலைவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்று சரணடையத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் சிறப்பு மண்டலக் குழுவின் பேச்சாளர் ஆனந்த், கடந்த 22ஆம் தேதி மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
- ஆயுதப் போராட்டத்தையும், இயங்கும் கட்டமைப்புகளையும் முற்றிலும் கைவிட விரும்புகிறோம்
- மாநில அரசுகளின் மறுவாழ்வு திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம்
- சரணடைய அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை கால அவகாசம் வழங்கவும்
- இந்தக் காலத்தில் நிதானமாக நடந்து கொண்டு, எங்களை குறிவைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்
என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் கோரிக்கை தொலைதூர காடுகளில் இருக்கும் மற்ற மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் சென்று சேரும் வகையில் இந்த தகவலை சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.