பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை என மதிக்கப்பட்ட அப்துல் காதீர் கான், வெளிநாடுகளுக்கு அணு திட்ட ரகசியங்களை மறைமுகமாக விற்றது குறித்து அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ உளவு அதிகாரி ஒருவர் உறுதியாக வெளிப்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:
பாகிஸ்தானில் இறுதி நாள்வரை தேசிய ஹீரோவாக போற்றப்பட்ட அப்துல் காதீர் கான், அணு ஆயுத தொழில்நுட்பத்தில் வல்லுநராக இருந்தார். 2021 அக்டோபர் 10 வரை அவர் பெருமையுடன் பாராட்டப்பட்டார். ஆனால் அவர் மறைந்த பிறகு, அவரது செயல்களில் மறைந்திருந்த இருண்ட பக்கங்கள் மெதுவாக வெளிச்சத்துக்கு வந்தன.
அதில் மிகவும் கவலை அளிக்கும் விஷயம் — கள்ளச் சந்தையில் அணு ரகசியங்களை விற்ற குற்றச்சாட்டு. ஈரான், வடகொரியா, லிபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும், மேலும் சில துஷ்பிரயோகம் செய்யும் சக்திகளுக்கும் அணு நுட்பங்களை விற்றதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இப்போது இந்த குற்றச்சாட்டுகளை சிஐஏவின் முன்னாள் உளவு அதிகாரி ஜேம்ஸ் லாயர் நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட சிஐஏ-வின் உளவு குழுவில் பணியாற்றிய ஜேம்ஸ் லாயர், முதலில் ஐரோப்பாவில் உளவு பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர், அப்துல் காதீர் கானின் சட்டவிரோத அணு வணிக வலையமைப்பைத் தடயமறிய நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அந்த காலத்தில் கண்டறிந்த பல ஆபத்தான உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ஜேம்ஸ் லாயரின் சொற்படி, அப்துல் காதீர் கான் ஒரு “மரண வியாபாரி”. ரகசிய அணு தகவல்களை விற்றதில் இருந்து கிடைத்த பணம், பாகிஸ்தான் ராணுவத்தின் சில உயர் அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளிடமும் பகிரப்பட்டதாக அவர் அதிர்சியாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் கானின் செயல்களை புலனாய்வு செய்வது கடினமாக இருந்தது; ஆனால் லிபியாவுக்கு தொழில்நுட்பம் வழங்கிய விவகாரத்தில் அவர் நேரடியாக பிடிபட்டதாக ஜேம்ஸ் லாயர் விளக்குகிறார்.
அமெரிக்க உளவுத்துறை, “BBC CHINA” எனும் சரக்கு கப்பலைத் தடுத்து சோதனை செய்தபோது, அதில் அணு உபகரணங்கள் கொண்ட பெட்டகங்கள் இருப்பதை கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகே விசாரணை தீவிரமானது; இதன் பின்னணியில் அப்துல் காதீர் கான் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இத்தகவல்கள் அனைத்தும் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், கானை வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். கானின் துரோகத்தால் பர்வேஸ் முஷாரஃப் மிகுந்த கோபத்தில் இருந்ததாகவும், அவரை நேரடியாகக் கொன்று விட வேண்டும் என்று கூட எண்ணியதாகவும் ஜேம்ஸ் லாயர் நினைவுகூர்கிறார்.
பாகிஸ்தானை அணு ஆயுத நாடாக மாற்றியதில் முக்கிய பங்காற்றிய அப்துல் காதீர் கான், இவரது சட்டவிரோத செயல்கள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுவதால், பல ஆண்டுகளாக ஹீரோவாக இருந்தவர் இப்போது பாகிஸ்தான் மக்களின் கண்களில் வில்லனாக மாறி வருகிறார்.