பாலிவுட்டின் அடையாளமாக திகழ்ந்த ‘ஹீமேன்’ தர்மேந்திராவின் மறைவு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும், இந்தி திரையுலகத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு முழு தலைமுறையையே வழிநடத்திய நடிகர் தர்மேந்திரா பற்றி ஒரு பார்வை…
பழைய காலத்தில் நடித்த நடிகர்களின் நடை, நடிப்பு, உடல் மொழி என்று அனைத்தையும் பின்பற்றுவது இன்றைய பல நட்சத்திரங்களின் வழக்கமாக மாறியுள்ளது. இப்படிப் பல தலைமுறைகளுக்கு ரோல் மாடல் ஆக திகழ்ந்தவர் தான் தர்மேந்திரா.
25வது வயதில் Dil Bhi Tera Hum Bhi Tere திரைப்படம் மூலம் பாலிவுட்டில் காலடி வைத்தார். அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் பின்னர் Shola Aur Shabnam, Boy Friend, Anupama, Shaadi, Chand Aur Suraj போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து, அவரை பார்வையாளர்கள் மத்தியில் நிலைநிறுத்தின.
1961 முதல் 1967 வரை அதிகமான ரொமான்ஸ் கதைகளில் நடித்த இவர், அதன் பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்யவேண்டும் என்ற ஆசையில் செயல்படத் தொடங்கினார். இதன் மூலம் ‘ஆக்ஷன் ஹீரோ’வாக உருவெடுத்தார். ரசிகர்கள் அன்புடன் அவரை “ஹீமேன்” என்று அழைக்கத் தொடங்கினர்.
80களில் அவர் நடித்த எந்தப் படமும் தோல்வி அடையாத அளவுக்கு சூப்பர் ஹிட்டாகி வந்தது. அமிதாப் பச்சனுடன் நடித்த Sholay திரைப்படம் இந்திய சினிமாவின் வரலாறே மாறும் வகையில் சாதனை படைத்தது. 19 ஆண்டுகள் அந்தப் படத்தின் வசூல் சாதனையை எவரும் முறியடிக்க முடியவில்லை.
தர்மேந்திரா என்றாலே ஹேமாமாலினி பெயரைச் சொல்லாமல் இருக்க முடியாது. ரீல் லைஃபிலும் ரியல் லைஃபிலும் சிறந்த ஜோடியாக திகழ்ந்தார்கள். அவர்களுடைய ஆன்-ஸ்க்ரீன் கேமிஸ்ட்ரி என்றால் அது ஒரு மாயாஜாலமே!
1970ல் Tum Haseen Main Jawaan படத்தின் படப்பிடிப்பில் மலர்ந்த காதல், 1980ல் திருமணமாக முடிந்தது. இந்த ஜோடி இணைந்து நடித்த பல படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றன.
1990க்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தர்மேந்திராவுக்கு கிடைத்த மதிப்பு, ரசிகர் ஆதரவு ஒருபோதும் குறையவில்லை. இன்றும் அவர் மீது கொண்ட அன்பு அதேபோலவே தொடர்கிறது.
சினிமாவிலேயே அல்லாமல், அரசியலிலும் இவர் தனது கண்ணியமான தடத்தை பதித்தார். ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் 14வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது குடும்பமும் முழுக்கவே சினிமாவுடன் இணைந்ததே –
- மகன் சன்னி தியோல் – பல வெற்றி படங்களில் ஹீரோ
- மகன் பாபி தியோல் – இன்றும் பெரிய நடிகர்
- மகள் ஈஷா தியோல் – தமிழ், இந்தி படங்களில் நடித்து வந்தார்
தர்மேந்திரா இறுதியாக நடித்த படம் Ikkis. அது டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தை தனது கண்களால் பார்க்க அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது மிகுந்த வருத்தம்.
ஒரு காலத்தில் ஓய்வு என்றே தெரியாத அளவுக்கு பிஸியாக இருந்த தர்மேந்திரா, இப்போது மட்டுமே நித்திய ஓய்வை எடுத்திருக்கிறார்…
ஆனால் அவர் திரையில் உருவாக்கிய பெரும் உலகம், அவரது பெயரையும் புகழையும் என்றும் அழியாமல் வைத்திருக்கும்.