இத்தாலியில் மலையோரப் பகுதியில் வாழ்ந்த குடும்பம் ஒன்று, தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல் நிர்வாகிகள் வரை பலரும் இக்குடும்பத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அப்ருஷோ மலைப்பகுதியில், பிரிட்டிஷ் நாதன் டிராவலியன் மற்றும் ஆஸ்திரேலியர் கேத்தரின் பர்மன்காம் ஆகிய தம்பதி மூன்று குழந்தைகளுடன் இயற்கையை சார்ந்த எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் நகர வாழ்க்கை சத்தமின்றி இயற்கையில் வளர வேண்டும் என்ற எண்ணம் காரணமாக, நவீன சவுகரியங்களைத் தவிர்த்து அவர்கள் வீட்டை வடிவமைத்தனர்.
வீட்டில் உள்ளழிவு வசதிகள் இல்லை; வெளியில் தனியாக அமைந்த கழிவறையையே பயன்படுத்த வேண்டும். கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தே தேவைகளை பூர்த்தி செய்தனர். சூரிய ஆற்றல், தீப்பொறி வெப்பம் போன்றவை மட்டுமே அவர்கள் பயன்படுத்திய சக்தி ஆதாரங்கள். குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்பாமல், தாமே ஆசிரியர்களாக மாறி பாடம் கற்றார்கள். இத்தனைக்கும் சமூகத்திலிருந்து வெகுதூரம் விலகி வாழ்ந்தனர்.
இது குறித்து சிலர் கல்வி கோணத்தில் விமர்சித்தாலும், இயற்கை வாழ்க்கை முறையைப் பின்பற்றிய இக்குடும்பத்திற்கு இணையத்தில் பலர் பாராட்டுக்கள் வழங்கினார்கள். ஆனால், கடந்த ஆண்டு அவர்கள் தங்கியிருந்த பகுதியில் வளரும் விஷ காளான்களை தவறுதலாக உண்பதால், பெற்றோர்கள் உட்பட ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுகாதார அதிகாரிகள் இவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று உறுதியாக அறிவுறுத்தினர்.
அதிகாரிகள் வீடு வந்து பரிசோதனை செய்த போதும், பெற்றோர் மாற்றத்துக்கு தயாராக இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. இதனால் “குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை” என்ற காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுகாதாரத்துறையின் வாதத்தை நீதிமன்றம் ஏற்று, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வாஸ்டோவில் உள்ள பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். கேத்தரின் தாயும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டபோதும், குழந்தைகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இத்தாலி மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நம் நாட்டை நம்பி அமைதியாக வாழ வந்தவர்களை இவ்வாறு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பலர் இணையத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
பிரதமர் மெலோனியும் நீதிமன்றத் தீர்ப்பில் உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகத் துறைகளுக்குள் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
ஒருபுறம் குடும்பத்திற்கு ஆதரவு கிடைக்க, மறுபுறம் “பெற்றோரின் பிடிவாதம் குழந்தைகளின் நலனுக்கு தீங்கு தரும்” என்ற எதிர்ப்புகளும் உண்டு. ஐரோப்பாவின் கவனம் இச்சம்பவத்தில் திரும்பிய நிலையில், குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுமா என்பது குறித்து உறுதி இல்லாத எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.