அண்மையில் வெள்ளி நகைகளில் மக்களின் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. வெள்ளி நகை கடைகள் அதிக அளவில் திறக்கப்படுவதும் இதைச் சுட்டிக்காட்டுகிறது.
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உயரத்திற்கு சென்றுள்ள நிலையில், தீபாவளிக்கு முன் ஒரு சவரன் 97 ஆயிரம் ரூபாயை கடந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது விலை சில அளவு குறைந்திருந்தாலும், உலக பொருளாதார சூழ்நிலைகளால் எதிர்காலத்தில் மீண்டும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால், பொதுமக்கள் வெள்ளி நகைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளி நகைகளுக்கான அதிக தேவை காரணமாக புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
தங்க நகைகளுக்கு போலவே, வெள்ளி நகைக்கடைகளும் பிரபலங்களை கொண்டு திறப்பு விழாக்கள் நடத்தி வருகின்றன. வெள்ளியில் தங்கத்தைக் கலந்துபோட்டு, ஃபேன்சி மற்றும் பாரம்பரிய கலெக்ஷன்களும் உருவாக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்ததால், தற்போது வெள்ளி நகைகள் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகின்றன. மேலும், தங்கத்தில் இல்லாத புதிய டிசைன்களும் வெள்ளி நகைகளில் கிடைக்கின்றன.
பொதுமக்கள் மத்தியில் வெள்ளி நகைகள் பிரபலமடையும் நிலையில், தங்கத்தைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் மதிப்பு உயர்வது எதிர்காலத்தில் பார்க்க வேண்டிய விஷயம். பட்ஜெட்டில் தங்கம் சிக்காத மக்களுக்கு, வெள்ளி நகைகள் மாற்று வாய்ப்பாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது.