ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் அருகே, டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று வெடித்துச் சிதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி பொருட்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி, துங்கர்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதனால் சாலையோரத்தில் இருந்த இரும்புக் கம்பத்தை லாரி மிகுந்த வேகத்தில் மோதியது.
இந்த மோதலின் தாக்கம் காரணமாக கண்டெய்னர் உடனடியாக வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்ட தருணமே லாரி தீப்பிடித்து எரிந்ததால், ஓட்டுநர் அங்கிலேயே உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். கண்டெய்னரில் இருந்த பொருட்களின் தன்மை காரணமாக வெடிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் விபத்துக்கள் குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.