டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சிரியாவும் தொடர்புடையது தெரிய வந்ததால், என்ஐஏ விசாரணை பரப்பை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டத்தில் பாகிஸ்தான்–துருக்கி மட்டுமல்லாமல், சிரியாவும் சேர்ந்திருப்பது பாதுகாப்புத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் — முஸம்மில் ஷகீல், ஷாகீன் சயீத், அடில் அகமது ரத்தார், முஃப்தி இர்பான் அகமது — ஆகியோரிடம் என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தொடர்ந்து புதிய தகவல்கள் பல வெளிச்சத்துக்கு வருகிறது.
முன்னதாக, துருக்கியில் இருந்த போது உமர் நபி, முஸம்மில் ஷகீல், முஸாப்பர் ரத்தார் ஆகிய மருத்துவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியையே மட்டும் சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இப்போது அவர்கள் சிரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடனும் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், டெல்லி குண்டுவெடிப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த உகாசாவின் தூண்டுதலிலேயே நடந்தது என்று முன்னதாக கருதப்பட்டாலும், தாக்குதலுக்கான திட்டத்தில் மேலும் இருவர் இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களான உமர், முஸம்மில், அடில் ஆகிய மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைஷல், ஹசிம், முகாசா ஆகிய பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு செயலி மூலம் மருத்துவர்களுக்கு 40-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்பி
வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள், தாக்குதல் நடத்தும் உத்திகள் ஆகியவற்றை பயங்கரவாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெளிவான உண்மையாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டு துருக்கி சென்ற மருத்துவர்கள் இடையில், உமர் நபி மட்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
மற்ற மருத்துவர் முசாப்பர் ரத்தார், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு சென்று
அல்-கொய்தா அமைப்பில் இணைந்தது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த உமர் நபியும் ஆப்கானிஸ்தான் சென்று சேர்ந்துவிட ஆசைப்பட,
பாகிஸ்தான் பயங்கரவாதி முகாசா அவரை இந்தியாவுக்குத் திரும்பி
ஜெய்ஷ்-இ-முகமது சார்பில் தாக்குதல் செய்யுமாறு மூளைச் சலவை செய்தது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதேநேரத்தில், ஜம்மு–காஷ்மீரின் பாம்போர் பகுதியைச் சேர்ந்த அமிர் என்பவர் கைது செய்யப்பட்டு,
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார் புதிதாக வாங்கி உமருக்கு வழங்கியது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ட்ரோன்களை ஏவுகணையாக மாற்றும் தொழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கு கற்றுக்கொடுத்ததாக
ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால், டெல்லி குண்டுவெடிப்பு விசாரணை ஜம்மு-காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான், துருக்கி, சிரியா என விரிந்து கொண்டே சென்று வரும் நிலையில்,
இந்தியாவுக்கு எதிராக இன்னும் எத்தனை சதி திட்டங்கள் பின்னப்பட்டுள்ளன என்பதை கண்டறிய
என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்து வருகின்றனர்.