தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், குழந்தைகள் நலனுக்கான யுனிசெஃப் (UNICEF) இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கில் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில் பெருமைச் சேர்த்த சாதனை
தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சந்துரு இயக்கிய ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்திருக்கும் அவர், அந்தப் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’ மற்றும் இயக்குநர் மிஷ்கினுடன் இன்னொரு படத்திலும் கீர்த்தி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வொரு குழந்தையும் கனவு காண தகுதியானது” – கீர்த்தி சுரேஷ்
யுனிசெஃப் தூதர் நியமனைத் தொடர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்ததாவது:
“இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் மிக பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், பாதுகாப்பாக வாழவும், தங்கள் கனவுகளை நோக்கி செல்வதற்கும் உரிமை உண்டு. இந்த விழிப்புணர்வை விரிவாக பரப்புவதில் எனது பங்களிப்பைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் இந்திய அலுவலகமும், “குழந்தைகள் நலனில் சமூக விழிப்புணர்வை அதிகரிக்க கீர்த்தி சுரேஷின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.