கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “ஆக்கபூர்வமான பொறுமையின்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் காலனித்துவத்திற்குப் பிறகான மனநிலையை மாற்றும் தேவையை வலியுறுத்திய பிரதமர், “இந்தியா வளர்ந்து வரும் சந்தை மட்டுமல்ல; உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி” எனக் குறிப்பிட்டார்.
அதேபோல்,
- நாட்டின் பொருளாதார மீட்சி,
- மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உணர்ச்சிகரமான அணுகுமுறை,
- மெக்காலே உருவாக்கிய 200 ஆண்டுகால அடிமை மனநிலையை முறியடித்தல்,
- இந்திய பாரம்பரியம், மொழிகள், அறிவு அமைப்புகளின் பெருமையை மீட்டெடுக்க அடுத்த 10 ஆண்டுகளை அர்ப்பணிக்கும் அவசியம்
என பல அம்சங்களை பிரதமர் தனது உரையில் வலியுறுத்தியதாக தரூர் குறிப்பிட்டார்.
தரூர் தனது எக்ஸ் பதிவில்,
“இந்திய தேசியவாதத்துக்காக ராம்நாத் கோயங்கா ஆங்கிலத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் பிரதமரின் உரை பொருளாதாரமும் கலாச்சாரமும் கலந்த ஒரு விரிவான நோக்கைக் கொண்டது. முன்னேற்றத்திற்காக தேசம் அமைதியற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். கடுமையான சளி–இருமலால் அவதிப்பட்டபோதிலும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்