கொங்கு வட்டாரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட புதிய திரைப்படத்திற்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருமலை புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கா. கருப்புசாமி தயாரிக்க, சுகவனம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி. விமல் ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பற்றிச் சொன்ன இயக்குநர் சுகவனம் கூறியதாவது:
“கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், இதுவரை பேசப்படாத ஒரு தனிப்பட்ட கதையை எங்கள் படம் சொல்லுகிறது. நிலத்தில் உழைப்பவர்களை ‘நல்லபாடன்’ என்று அழைக்கும் கொங்கு வட்டார மரபை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கதை.
நிலம் இல்லாமலேயே பிறர் நிலத்தில் உழைக்க வேண்டிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கைகள், ‘ஒண்டிமுனி’ எனும் சிறுதெய்வத்தை குலதெய்வமாக வணங்கும் பண்பாடு, ஆதிக்க சக்திகளின் சுரண்டல்கள், நல்லபாடனின் போராட்டங்கள் ஆகியவை படத்தின் முதன்மை கருப்பொருள்.
படம் பார்க்கும் பார்வையாளர்கள் ஒரு உண்மையான கிராம வாழ்க்கையிலே தங்களை இருந்ததாக உணர்வார்கள். இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கலை—அவர்களை நிச்சயம் சென்றடையும் என நம்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.
இந்த படம் நவம்பர் 28-ம் தேதி திரையிடப்படுகிறது.