அஜித் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால், அவரது அடுத்த படத்தின் தயாரிப்பு பணிகள் சிக்கலில் சிக்கியுள்ளன.
‘குட்பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் புதிய படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. ‘ஏகே 64’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருந்தாலும், தயாரிப்பாளர் தேர்விலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ரோமியோ பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. ஆனால் அஜித்தின் சம்பளமாக ₹185 கோடி கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி, படத்தின் மொத்த பட்ஜெட் ₹300 கோடிக்கு மேல் செல்வதாக கணிக்கப்பட்டது. இதனால், தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நிறுவனமே விலகியுள்ளது.
பின்னர் கோல்ட்மைன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இப்படத்துக்குத் தேவையான மிகப்பெரிய முதலீட்டில் லாபம் ஈட்டுவது சாத்தியமில்லையென அந்த நிறுவனமும் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் ஏஜிஎஸ் நிறுவனத்துடனும் பேச்சுக்கள் நடந்தபோதும், அந்நிறுவனம் எந்த ஆர்வமும் காட்டாதது வெளிவந்திருக்கிறது.
அஜித்தின் உயர்ந்த சம்பளம் தயாரிப்பாளர்களை பின்வாங்க வைத்துள்ளதால், ‘ஏகே 64’ படத்துக்கான தயாரிப்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலை தொடர்கிறது. அதனால், பட அறிவிப்பு நெருங்கிய காலத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.