பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி அதிக முன்னிலைப் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட மகா கூட்டணிக்குப் (ஆர்ஜேடி–காங்கிரஸ்) பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ்தான் முக்கிய காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஆர்ஜேடியின் நம்பிக்கை – தேஜஸ்வியின் வளர்ச்சி அலை
பிஹார் வளர்ச்சியற்ற மாநிலமாகவே உள்ளது என்று கடந்த சில ஆண்டுகளாகவே தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து கூறி வந்தார். “வளர்ந்த பிஹார்” என்ற அவரது வாக்குறுதிகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றன.
2020-ல் மிக நெருக்கத்தில் அரசை இழந்த ஆர்ஜேடி கவனமாக இருந்தது. இம்முறை நிதிஷ் மீது மக்கள் விரக்தி அதிகமாக இருப்பதால், தேஜஸ்வியே அடுத்த முதல்வர் என ஆர்ஜேடி நம்பியது.
ஆனால் தற்போது முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், என்டிஏ 190 இடங்களுக்கு மேல் முன்னிலையில், மகா கூட்டணி 50 இடங்களுக்குள் சுருங்கியுள்ளது.
61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ்— வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை.
எப்படி சறுக்கியது மகா கூட்டணி?
1. என்டிஏ-வின் நிதிஷ் அசத்தல்
- தேர்தலுக்கு முன் நிதிஷ் பல நலத்திட்டங்களை அறிவித்தார்.
- குறிப்பாக பெண்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
- எந்த சலசலப்பும் இல்லாமல் என்டிஏ ஆரம்பத்திலேயே தொகுதி பங்கீட்டை முடித்தது.
2. மகா கூட்டணியில் குழப்பம் – காங்கிரஸ் பங்கு
- ராகுல் மேற்கொண்ட ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ போது தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது முதல் முரண்பாடு.
- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை டெல்லியில் இருந்த காங்கிரஸ் நீட்டித்தது.
- 2020-ல் 70 இடங்களில் போட்டியிட்டு 19-ல் வென்ற காங்கிரஸ்—
இம்முறை அதைவிட அதிக தொகுதிகளை கோரி அழுத்தம் கொடுத்தது.
இதன் விளைவாக:
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இருந்து விலகியது.
- பல சிறு கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க ஆர்ஜேடி பெரும் சிக்கல்.
- வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் முடியும்வரை தொகுதி பங்கீடு முடிவாகாமல் குழப்பமே நிலைநிறுத்தம்.
ஆர்ஜேடி 143, காங்கிரஸ் 61, மற்ற கட்சிகள் குறைவான தொகுதிகளைப் பெற்றாலும்
உள்ளக மோதல்கள் தொடர்ந்தன.
இந்த குழப்பத்தை வைத்து என்டிஏ கடுமையாக கேள்வி எழுப்பியது:
“தொகுதி பங்கீட்டுக்கே இவ்வளவு சண்டை— ஆட்சி வந்தால் என்ன நிலை?”
3. ஒத்துழைப்பு இல்லை – வாக்கு பரிமாற்றமும் இல்லை
கடைசி வரை நீடித்த மோதல்கள் காரணமாக:
- ஒத்துழைப்பு சரியாக அமையவில்லை.
- அடிப்படைத் தொண்டர்கள் உற்சாகம் குறைந்தது.
- கூட்டணிக்குள் வாக்கு பரிமாற்றம் நடந்ததே இல்லை.
இதன் தாக்கம் முடிவுகளில் தெளிவாக தெரிகிறது:
- கடந்த முறை 75 இடங்களில் வென்ற ஆர்ஜேடி— இம்முறை 35+ இடங்கள் மட்டுமே.
- 60 இடங்களை அடித்துக் கேட்ட காங்கிரஸ்— 5 இடங்கள் மட்டுமே.
அரசியல் விமர்சகர்கள்:
“காங்கிரஸின் பேராசை மகா கூட்டணியை ஆழத்தில் தள்ளிவிட்டது” என கூர்கிறார்கள்.
4. தோல்விக்கு புதிய காரணங்கள் தேடும் காங்கிரஸ்
முடிவுகள் வெளிவரத் தொடங்கியவுடனே
காங்கிரஸ் EVM, வாக்குத் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து
தோல்விக்கான காரணங்கள் தேடத் தொடங்கியுள்ளது.