ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் வெற்றிக் கொண்டாட்ட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு உணர்ச்சி பொங்கிப் பேசியுள்ளார்.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் சேட்டி, அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடித்த ‘த கேர்ள்ஃபிரண்ட்’ நவம்பர் 7ஆம் தேதி வெளியாகியது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய விஜய் தேவரகொண்டா கூறியதாவது:
“‘கீத கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் கவனித்து வருகிறேன். அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி போன்றவர். தன் கரியரின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், இத்தகைய சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க எடுத்த முடிவு எனக்கு மிகுந்த பெருமை தந்தது.”
அவர் தொடர்ந்து கூறினார்:
“விமர்சனங்களும் கேலிகளும் வந்தபோது, அவரது இடத்தில் நான் இருந்தால் உடனே பதில் கொடுத்திருப்பேன். ஆனால் ராஷ்மிகா தினமும் கருணையுடன் பாதையில் தொடர்ந்து செல்கிறார். மக்கள் எதைச் சொன்னாலும் அமைதியாக இருப்பது அவரின் வலிமை. ஒரு நாள் உலகம் உண்மையான ராஷ்மிகாவை உணர்ந்தே தீரும்.”
‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தை பார்த்தபோது தன் கண்கண்ணீரை அடக்க முடியவில்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
“பாக்ஸ் ஆபிஸ் வெற்றியே முக்கியமில்லை; இந்த படம் பெண்களுக்கு குரல் கொடுக்க துணிவு தந்துள்ளது. சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. பல வணிக ஹிட்கள் செய்ய முடியாததை இந்த படம் சாதித்துள்ளது. இயக்குநர் ராகுல், தயாரிப்பாளர்கள் உண்மையில் பாராட்டத்தக்க வேலை செய்துள்ளனர்.”
விழாவின் இறுதியில், ராஷ்மிகா குறித்து தனது மனமார்ந்த பெருமிதத்தை விஜய் மீண்டும் வலியுறுத்தினார்.
நட்பு–காதல் வதந்திகள்
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா பல ஆண்டுகளாக நெருக்கமாக இருப்பதாக ரசிகர்கள் நம்புகின்றனர். இருவரும் வெளிப்படையாக காதலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக பல ஊடகங்களில் தகவல்கள் வலுப்பெற்றுள்ளன.