அமெரிக்க வேலைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை முழுமையாக நம்பும் பழக்கத்தை குறைத்து, அமெரிக்கர்களுக்கே மேம்பட்ட தொழில்திறன்களை வழங்க புதிய வடிவிலான H-1B விசா திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய H-1B விசா அணுகுமுறை, திறமையான வெளிநாட்டு நிபுணர்களை தற்காலிகமாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்து, அங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
“இது அமெரிக்க உற்பத்தி திறனை மீட்டெடுக்கும் அறிவு பரிமாற்ற (knowledge transfer) முயற்சியாகும்,”
என பெசென்ட் விளக்கம் அளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“20 முதல் 30 ஆண்டுகளாக துல்லியமான உற்பத்தி (precision manufacturing) பணிகளை அமெரிக்காவில் நாம் செய்து வரவில்லை. இப்போது கப்பல் கட்டுமானம் மற்றும் செமி கண்டக்டர் தொழில்கள் ஆகியவற்றை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதே நோக்கம். இதற்காக அரிசோனாவில் பெரிய அளவிலான உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படவிருக்கின்றன.
அதற்காக திறமையான வெளிநாட்டு நிபுணர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு H-1B விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைப்போம். அவர்கள் இங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு தங்கள் நாடுகளுக்குத் திரும்புவார்கள். அதன் பின்னர் அமெரிக்க தொழிலாளர்களே அந்தப் பொறுப்புகளை ஏற்க முடியும்,” என்றார்.
பெசென்ட் மேலும் தெரிவித்ததாவது, “H-1B விசா திட்டத்தின் இந்த புதிய மாற்றம், முக்கியமான தொழில்களை மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பியிருப்பதை குறைப்பதற்குமான முயற்சியாகும். அதேசமயம், அமெரிக்க குடும்பங்கள் வலுவான வர்த்தகக் கொள்கையால் பெறும் நன்மைகளை உணர, அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளார்,” என்றார்.
ட்ரம்ப்பின் இந்த புதிய H-1B திட்டம், வெளிநாட்டு திறமைகளை உள்வாங்கும் விதத்தை மாற்றி அமைத்து, அமெரிக்க தொழில்துறை சுயமறுசீரமைப்பை நோக்கிய முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.