தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், தங்க நகை தயாரிப்பு தொழிலில் பெரும் மந்தநிலை நிலவுகிறது. இதனால், கோவையில் பணியாற்றி வந்த சுமார் 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் நகரமான கோவை, தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் பெயர் பெற்றது. இங்குச் சுமார் ஒரு லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தங்க விலை உயர்வால் வியாபாரம் மந்தம்
சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:
“கரோனா முன்பாக கோவையில் தினமும் சராசரியாக 200 கிலோ தங்க நகைகள் விற்பனை நடைபெற்றன. ஆனால் 2020க்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை 15% இலிருந்து 6% ஆகக் குறைத்தாலும், உலக சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை அடிக்கடி அதிகரிக்கிறது.
இதன் விளைவாக நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.”
வேலை நெருக்கடியால் ஊர் திரும்பிய பொற்கொல்லர்கள்
திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் தவிர, பெரும்பாலான நாட்களில் வியாபாரம் நடைபெறவில்லை. பணி ஆணைகள் இல்லாததால், பல பொற்கொல்லர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர்.
“கோவையில் மொத்தம் 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையால், அவர்களில் 10 ஆயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்,” என முத்து வெங்கட்ராம் தெரிவித்தார்.