பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89) தற்போது மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
1960-ம் ஆண்டிலிருந்து இந்தி திரைப்படங்களில் நடித்துவரும் தர்மேந்திரா, இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1973-ம் ஆண்டு மட்டும் 8 ஹிட் படங்களை வழங்கியவர். 1987-ல் 9 படங்கள் வெளியானதில் 7 ஹிட்டானது எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரை ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, வெண்டிலேட்டரில் உள்ளார் எனவும், சில ஊடகங்கள் அவர் காலமானார் எனவும் தவறான செய்திகளை வெளியிட்டன.
இதற்கு அவரது மனைவி ஹேமமாலினி தனது ‘எக்ஸ்’ தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) விளக்கம் அளித்துள்ளார்:
“சிகிச்சையில் குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி இவ்வாறு பொய்யான செய்திகளை பரப்புவது மிகுந்த பொறுப்பற்ற செயல். தயவு செய்து குடும்பத்தின் தனியுரிமையை மதியுங்கள்,” என அவர் கூறியுள்ளார்.
அதேபோல், அவரது மகளும் நடிகையுமான ஈஷா தியோல் தெரிவித்துள்ளார்:
“அப்பா (தர்மேந்திரா) நலம் பெறுகிறார். விரைவில் வீடு திரும்புவார்,” என அவர் கூறியுள்ளார்.