பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா இந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காப்புக் கட்டுதல் வழிபாட்டுடன் தொடங்குகிறது.
அன்று நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் விழா தொடங்கும். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, அந்த நாளில் சிறப்பு காரணமாக பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். பின்னர், பிற்பகல் 3 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்று சந்நிதி அடைக்கப்படும்.
இதற்குப் பிறகு, திரு ஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல், பழநி மலைக்கோயிலைச் சுற்றியுள்ள கிரிவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வுகள் தொடங்கும்.
அதன்படி,
- மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம்,
- கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதம்,
- தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதம்,
- மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதம் நடைபெற உள்ளன.
விழாவின் நிறைவுநாளான அக்டோபர் 28-ம் தேதி, மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனாசமேத முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.