மியான்மர் – தாய்லாந்து எல்லையில் சைபர் மோசடி கும்பல்களால் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டிருந்த 197 இந்தியர்கள், தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
தகவலின்படி, தாய்லாந்து – மியான்மர் எல்லைப்பகுதியில் சைபர் மோசடி மையங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சர்வதேச அளவில் பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெறுகின்றன.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு என கூறி தாய்லாந்துக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டினரைக், சீனாவைச் சேர்ந்த கும்பல் மியான்மர் எல்லையில் உள்ள சைபர் மையங்களில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தி, மோசடி செயல்களில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தையடுத்து மியான்மர் பாதுகாப்புப் படையினர் அந்த மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பணியாற்றியிருந்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அதில் மீட்கப்பட்ட 197 இந்தியர்கள் தாய்லாந்து எல்லை நகரமான மா சாட் (Mae Sot) நோக்கி சென்றனர். பின்னர் அவர்கள் தாய்லாந்து போலீஸாரால் தற்காலிகமாக காவலில் எடுக்கப்பட்டனர்.
இந்த தகவல் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டதும், இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இந்திய விமானப்படையின் இரண்டு ஜம்போ விமானங்கள் மா சாட் நகரத்துக்கு அனுப்பப்பட்டு, மீட்கப்பட்ட 197 இந்தியர்களும் அதில் தாயகம் திரும்பினர்.
இந்த நடவடிக்கையை பார்வையிடுவதற்காக தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்விராகுல் மா சாட் விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு இந்திய தூதர் நாகேஸ் சிங் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு, மியான்மரில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டதை தாய்லாந்து பிரதமர் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.