‘மிடில் கிளாஸ்’ ட்ரெய்லர் – நடுத்தர குடும்பத்தின் நிஜங்கள்!
நடிகர் முனீஷ்காந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 21-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ட்ரெய்லர் விமர்சனம்:
நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் உருவாகும் கதைகள் எப்போதும் பார்வையாளர்களிடையே நெருக்கத்தை உருவாக்குகின்றன. திரையில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை சிக்கல்களில் தங்களை இணைத்துக் கொள்ளும் காரணத்தால், அந்த வகை படங்களுக்கு பெரும்பாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
வி.சேகர் இயக்கிய பழைய குடும்ப நகைச்சுவை படங்களிலிருந்து, சமீபத்திய ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்கள் வரை இதற்குச் சான்றாக நிற்கின்றன. அந்த வரிசையில் ‘மிடில் கிளாஸ்’ படமும் சேரும் வாய்ப்பு ட்ரெய்லரிலேயே வெளிப்படையாக தெரிகிறது.
நகைச்சுவை நடிகராகப் பெயர் பெற்ற முனீஷ்காந்த், குணச்சித்திரம் மிக்க கதாபாத்திரத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை மற்றும் உணர்ச்சி சரியான அளவில் கலந்த சீரான திரைக்கதை அமைந்தால், இப்படம் வெற்றிப் பட்டியலில் இடம்பிடிக்கும் என சொல்லலாம்.