ராகுல் காந்தி சொந்த நாட்டை விமர்சிப்பவர்; அவருக்கு பிரதமர் ஆவதற்கான புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் விமர்சனம்
அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான மேரி மில்பென், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன் பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மேரி மில்பென், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ராகுல் காந்தி சொல்வது முற்றிலும் தவறு. பிரதமர் மோடி ட்ரம்பை பார்த்து பயப்படுவதில்லை. அவர் நீண்டநாள் நுண்ணறிவும், ராஜதந்திர வியூகமும் கொண்டவர். மோடி அமெரிக்காவுடனான உறவை ஒரு வியூக ரீதியாக நடத்துகிறார். ட்ரம்ப் எப்போதும் தனது நாட்டின் நலனையே முன்னிலைப்படுத்துவார். அதேபோல் மோடியும் இந்தியாவின் நலனுக்காகவே செயல்படுகிறார். இதை நான் பாராட்டுகிறேன்.”
அவர் மேலும் கூறினார்:
“ராகுல் காந்தி இதை புரிந்து கொள்வார் என்று நான் எதிர்பார்ப்பதில்லை, ஏனெனில் அவருக்கு பிரதமராகும் அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று சொந்த நாட்டை, சொந்த மக்களை விமர்சிப்பவரை மக்கள் எப்போதும் ஏற்கமாட்டார்கள். எனவே, ‘நான் இந்தியாவை வெறுக்கிறேன்’ என்ற சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி நிறுத்துவது நல்லது.”
மேரி மில்பென், 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை முதன்முறையாக சந்தித்திருந்தார்.