மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா நெருங்கிய போராட்டத்தில் தோல்வி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில், இந்தியா வெற்றியை நெருங்கி வந்தபோதும், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 288 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹீதர் நைட் சிறப்பாக ஆடி 109 ரன்கள் எடுத்தார். எமி ஜோன்ஸ் 58 மற்றும் நேட் சீவர் பிரண்ட் 38 ரன்கள் பங்களித்தனர்.
வெற்றிக்கு 289 ரன்கள் இலக்காகக் கொண்ட இந்திய அணி, சிறப்பாக பதிலடி கொடுத்தது. ஸ்மிருதி மந்திரா 88, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 70, தீப்தி சர்மா 50 ரன்கள் என முக்கிய பங்களிப்புகளை செய்தனர். ஒரு கட்டத்தில் வெற்றிக்கு இந்தியாவுக்கு 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருந்தது.
ஆனால் முக்கிய நேரத்தில் ஸ்மிருதி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 284 ரன்கள் மட்டுமே எடுத்து நெருங்கிய தோல்வியைச் சந்தித்தது.
இப்போட்டியுடன், இந்தியா 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் தொடரில் தன் பயணத்தைத் தொடர்கிறது. அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது.