அமெரிக்கர்களுக்கு ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாட்டின் வரி வருவாயிலிருந்து பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு (பணக்காரர்களைத் தவிர) தலா 2,000 டாலர் (ரூ.1.77 லட்சம்) டிவிடெண்டாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை, உற்பத்தி நாடுகளின் அடிப்படையில் 10 முதல் 50% வரை உயர்த்தியிருந்தார். நீண்டகாலமாக நிலவி வந்த வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
எனினும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி மேற்கொண்ட இந்த முடிவு எதிர்க்கப்பட்டதால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, நீதிமன்றம் ட்ரம்பின் நடவடிக்கையின் சட்டபூர்வ தன்மை குறித்து சந்தேகம் வெளியிட்டது. இதன் விளைவாக பல வரிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்பும், 100 பில்லியன் டாலர் வரை திருப்பித் தர வேண்டிய நிலையும் உருவாகியிருக்கிறது.
இதுகுறித்து ட்ரம்ப் தனது “Truth Social” வலைதளத்தில் பதிவிட்டதாவது:
“இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது அமெரிக்காவை உலகின் மிக பணக்கார, மதிப்புமிக்க நாடாக மாற்றும். இந்த கொள்கையை விமர்சிப்பவர்கள் முட்டாள்கள். வரி வருவாயிலிருந்து பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு விரைவில் தலா 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்கப்படும்,” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து கூறுகையில்,
“இந்த டிவிடெண்ட் தொகை பல்வேறு வழிகளில் வழங்கப்படும். வரி குறைப்புகள், டிப்ஸ்களுக்கு விலக்கு, கூடுதல் நேர பணிக்கு வரி சலுகை, சமூக பாதுகாப்பு மற்றும் வாகனக் கடன்களுக்கு வரி விலக்கு ஆகியவற்றின் மூலம் வழங்கப்படலாம்,” என்றார்.
அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அவரது வர்த்தகக் கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.