டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற டபிள்யூடிஏ (WTA) பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடரில், கடந்த ஒரு வாரமாக கடுமையான போட்டிகள் நடைபெற்றன. இறுதிச் சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 6ஆம் நிலை வீராங்கனையான ரைபாகினா, உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்காவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ரைபாகினா, 6-3, 7-6 (7/0) என்ற செட் கணக்கில் சபலெங்காவை வீழ்த்தி, எதிர்பாராத வகையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வெற்றிக்குப் பின் ரைபாகினா தெரிவித்ததாவது:
“இந்த வாரம் எனக்குப் புதுமையான, நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் நான் வெற்றி பெறுவேனா என்றே தெரியவில்லை. ஆனால் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடி இறுதியில் பட்டத்தை வென்றது எனக்கே அதிசயமாக இருக்கிறது.
இகா ஸ்வியாடெக், அமந்தா அனிசிமோவா, ஜெஸ்ஸிகா பெகுலா போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தியதை ஒருபோதும் மறக்க முடியாது,” என்றார்.
2022-ஆம் ஆண்டில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.