“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு மன்னிப்பே அல்ல” — நடிகை கவுரி கிஷன்
“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது உண்மையான மன்னிப்பே அல்ல. குறிப்பாக ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்ற காரணத்துடன் கேட்கப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது,” என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமான கேள்வி எழுப்பிய யூடியூபருக்கு எதிராக அவர் கடுமையாகப் பதிலளித்திருந்தார். அந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவியதும், கவுரிக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, கவுரி நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதே சமயம், சம்பந்தப்பட்ட யூடியூபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு மன்னிப்பு வீடியோவையும் வெளியிட்டார். அதில் அவர், “நான் கவுரியை உருவக் கேலி செய்யவில்லை; அது வெறும் ஜாலியான கேள்வி மட்டுமே. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்று கூறியிருந்தார்.
இந்த மன்னிப்பு குறித்து கவுரி கிஷன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இன்று பதிவிட்டதாவது:
“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. குறிப்பாக, வழக்கமாக சொல்லப்படும் ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்ற சால்ஜாப்போடு கேட்கப்படும் மன்னிப்பு இன்னும் மோசமானது. நான் ஒருபோதும் போலியான வருத்தத்தையோ, நாடகமிகு வார்த்தைகளையோ ஏற்க மாட்டேன். நாம் அனைவரும் இன்னும் சிறப்பாக செயல்பட கற்றுக்கொள்ளலாம்.”
‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கவுரி கிஷன், தற்போது நடித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஏற்பட்ட இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.