உ.பி. மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் — முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் “வந்தே மாதரம்” பாடலின் பாடலை கட்டாயமாக்குவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கோரக்பூரில் நடைபெற்ற ‘ஏக்தா யாத்திரை’ மற்றும் ‘வந்தே மாதரம்’ பாடும் நிகழ்வில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்த ஆண்டு வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு, பாடலைப் பாடுவது நமது தேசத்தின் மீது மரியாதையும் பெருமையும் கொண்ட மனப்பான்மையை உருவாக்கும். அதனால், உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் கல்வி நிறுவனத்திலும் இதை பாடுவது கட்டாயமாக்கப்படும்” என்றார்.
வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875 நவம்பர் 7 அன்று “வந்தே மாதரம்” பாடலை இயற்றினார். “பாரத அன்னையே, நான் உனக்கு தலை வணங்குகிறேன்” என்ற பொருளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், “வந்தே மாதரம்” பாடல் வீரர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின், 1950 ஜனவரி 24 அன்று இந்த பாடல் தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த பாடலுக்கு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையொட்டி, நவம்பர் 7 அன்று டெல்லியில் மத்திய அரசு ஏற்பாடு செய்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு அவர் “வந்தே மாதரம்” பாடலை நினைவுகூரும் விதமாக அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிட்டார். மேலும், பாடலின் 150 ஆண்டு கொண்டாட்டத்தையும் தொடங்கி வைத்தார். இதன்படி, அடுத்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
“வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; இது ஒரு மந்திரம், ஒரு சக்தி, ஒரு கனவு, ஒரு தீர்மானம். சுதந்திரப் போராட்ட காலத்தில், போராட்ட வீரர்கள் எதிரிகளின் குண்டுகளை எதிர்கொண்ட போதும், தூக்கு மேடையில் நின்றபோதும், அவர்களின் வாயிலிருந்து ஒலித்த மந்திரம் வந்தே மாதரம்தான். இன்று நமது ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அதே மந்திரமே அவர்களுக்கு உற்சாகமாக உள்ளது.
இந்தப் பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது; இது நமது ஒற்றுமையையும் தேசிய உணர்வையும் வலுப்படுத்துகிறது,” என அவர் தெரிவித்தார்.