பிஹார் மாநில சட்டப்பேரவையின் 243 இடங்களுக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 24ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.
இது குறித்து பாட்னாவில் இன்று (ஞாயிறு) ஊடகவியலாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். இந்த மாத இறுதிக்குள் மொத்தம் நான்கு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பிரச்சார நிகழ்ச்சி அக்டோபர் 24ஆம் தேதி சமஸ்திபூரில் நடைபெறும். அதே நாளில் அவர் பெகுசராயில் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்வார்,” என்றார்.
தேர்தலில் பாஜக (BJP) மற்றும் ஜேடியு (JDU) கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பிரிவு) 29 இடங்களில் போட்டியிடுகிறது.
உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.