பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பி தலைமறைவு
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பி தலைமறைவாகியுள்ளார்.
சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்மீத் சிங். இவர்மீது ஜிர்காபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், திருமணத்தை மறைத்து ஏமாற்றியதுடன், பாலியல் வன்கொடுமை செய்ததற்கும், ஆபாசமான தகவல்கள் அனுப்பியதற்கும், மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சிவில் லைன் போலீசார் பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்திலுள்ள தப்ரி கிராமத்தில் அவர் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் கற்கள் எறிந்து, துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த குழப்பத்தில், ஹர்மீத் போலீசாரிடமிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாட்டியாலா நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஒரு பஞ்சாபி வெப் சேனலுக்கு ஹர்மீத் சிங் வழங்கிய பேட்டியில் அவர் கூறியதாவது:
“என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை. பஞ்சாப் மக்களுக்காக நான் பேசுவதை தடுக்கவே இந்த வழக்கு உருவாக்கப்பட்டது. மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடப்பதில்லை. டெல்லியில் ஆட்சியை இழந்த பிறகு, அதே பாணியில் பஞ்சாபையும் அழிக்க முயற்சிக்கின்றனர். எனக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. என்மீது போலியான ‘என்கவுண்டர்’ நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே, ஜாமீன் கிடைத்தால் மட்டுமே இந்தியா திரும்புவேன்,” என்று அவர் கூறியுள்ளார்.