ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சினையை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதினையும், ட்ரம்ப்பையும் அலாஸ்காவில் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த சந்திப்பு எந்த முக்கிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதன் பின், ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் அதிபர் ட்ரம்ப் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. தொலைதூரம் சென்றும் தாக்கும் திறன் கொண்ட “டோம் ஹாக்” ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கும் திட்டத்தையும் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் இன்று சந்திப்பு நடைபெறவிருந்தது. ஆனால் அதற்கு முன், ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இருவரும், உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் விரைவில் நேரில் சந்தித்து ஆலோசிக்க ஒப்புக் கொண்டனர்.
ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரம்லின் வெளியிட்ட அறிக்கையில், “ட்ரம்ப்புடன் நடந்த தொலைபேசி உரையாடலின் விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படமாட்டாது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் தெரிவித்தார். இதுகுறித்து புடாபெஸ்டில் இரு தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள்” என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேல் – காசா அமைதி முயற்சியில் கிடைத்த வெற்றி, ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வழிவகுக்கும் என நம்புகிறேன். ரஷ்ய அதிபர் புதினையும் நானும் ஹங்கேரியின் புடாபெஸ்டில் சந்திக்கவுள்ளோம். அப்போது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்து, புதினுடன் நடந்த உரையாடல் மற்றும் இதர முக்கிய அம்சங்கள் குறித்து பேசவிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.