சத்தீஸ்கர்: மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு – 3 நாட்களாக குடும்பம் தவிப்பு
ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், குடும்பத்தினர் கடந்த மூன்று நாட்களாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கான்கெர் மாவட்டம் கோடிகுர்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மனிஷ் நிஷாத் (50) உடல்நலக்குறைவால் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடலை கிராமத்துக்குக் கொண்டு வந்து தங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய முயன்றனர்.
ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் என்பதால், கிராம மக்கள் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து குடும்பத்தினர் உடலை அருகிலுள்ள சராமா கிராமத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மூன்று நாட்களாக உடலை எங்கும் அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், மனிஷ் உடல் மீண்டும் கோடிகுர்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கிறிஸ்தவ சமூகத்தினர் கோடிகுர்ஸ் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரினர்.
அனுகிரா பிரார்த்தனை கூடத்தின் பாஸ்டர் மோகன் குவல் கூறியதாவது:
“மனிஷ் உடலை அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். வேறு வழி இல்லை,” என்றார்.
அதேநேரத்தில், பஞ்சாயத்து உறுப்பினர் தேவேந்திர டெகம் தெரிவித்ததாவது:
“கோடிகுர்ஸ் கிராம மக்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்கள். உடலை அடக்கம் செய்ய அவர்களுடைய வழிமுறைப்படி நடந்தால்தான் அனுமதி கிடைக்கும். இல்லையெனில் வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்,” என்றார்.
இதற்கு முன்பும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் உட்பட பல பகுதிகளில், மதம் மாறியவர்களின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.