விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ — ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வைப் சாங்!
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தளபதி கச்சேரி’ லிரிக் வீடியோ இன்று மாலை 6.03 மணிக்கு வெளியானது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார், பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். மேலும், இந்தப் பாடலை விஜய்யே பாடியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. அதன் பின்னர் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடலாம் என்பதும் பேசப்படுகிறது.
‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடல் வரிகளில் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, அனிருத்தின் இசையமைப்பில் வரும் துள்ளலான ரிதம் மற்றும் பீட், பாடலுக்கு ஒரு வைப் கொடுக்கும் வலிமையைக் கொடுத்துள்ளது.
பாடலின் பீட் மற்றும் ஆற்றல், விஜய் நடித்த முந்தைய ஹிட் படங்களின் பாடல்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில், ‘தளபதி கச்சேரி’ விஜய் ரசிகர்களுக்கான ஒரு பவர்-பேக்டு வைப் சாங் என்று சொல்லலாம்.