இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணி – அரையிறுதிக்கான நெருக்கடி வெற்றி அவசியம்!
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை நடைபெற்ற நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி என கலவையான நிலைப்பாட்டில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 59 ரன்களால், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 88 ரன்களால் வென்றது. ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் தலா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதுவரை 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, மீதமுள்ள 3 ஆட்டங்களில் குறைந்தது 2 வெற்றிகளைப் பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளது. இதன் மூலம் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும்.
இந்திய அணி தற்போது 5 பந்து வீச்சாளர்களுடன் (அதில் 3 ஆல்ரவுண்டர்கள்) விளையாடி வருகிறது. ஆனால் 6-வது பந்து வீச்சாளர் இல்லாதது கடந்த இரு ஆட்டங்களிலும் அணிக்கு பெரும் சவாலாக மாறியது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் இன்று அணியின் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், இங்கிலாந்து அணி இதுவரை 4 ஆட்டங்களில் 3 வெற்றி மற்றும் ஒரு முடிவில்லாத ஆட்டத்துடன் 7 புள்ளிகளை பெற்று, பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிடும்.