மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்குவைதா ஆதரவு ஆயுதக் குழுக்களின் அட்டூழியம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிய 5 இந்தியர்கள் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டு மின்சார ஒப்பந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதை உறுதி செய்துள்ளார்.
தற்போது ராணுவ ஆட்சியில் இருக்கும் மாலியில், அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், மாலியின் கோர்பி என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறுகையில்,
“எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 5 இந்தியப் பணியாளர்கள் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாலியில் இருந்த பிற இந்தியர்களை தலைநகர் பமாகோவில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை,”
என்று தெரிவித்துள்ளார்.
மாலி கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதக் குழுக்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அல்குவைதா ஆதரவு பெற்ற ஜேஎன்ஐஎம் (JNIM) என்ற அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக அந்நாட்டில் அரசியல் குழப்பம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
2012 முதல் தொடங்கிய ராணுவக் கிளர்ச்சி மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களால் வெளிநாட்டு நபர்கள் கடத்தப்படுவது மாலியில் வழக்கமானதாகி விட்டது. பெரும்பாலும், பிணைத் தொகை பெற்றுக் கொண்டு கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், ஜேஎன்ஐஎம் குழு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவரை கடத்தியது. பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பிணையாகப் பெற்று அவர்களை விடுவித்தது.
இந்த ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு தற்போது வடக்கு மாலி, மையப் பகுதிகள் மற்றும் நைஜர்–பர்கினா ஃபாசோ எல்லைகளில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. மாலியின் ராணுவ ஆட்சித் தலைவர் அசிமி கோய்டா, தீவிரவாதக் குழுக்களை முறியடிப்பதாக உறுதி தெரிவித்திருந்தாலும், அவை இன்னும் தலைநகர் நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பது அங்குள்ள மக்களுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளைச் சுமத்தி வரும் இந்த ஆயுதக் குழுக்கள், அந்நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தின் நிழல் பெரிதாகி வருவதை வெளிப்படுத்துகின்றன.