சபரிமலையில் பக்தர்கள் பெருங்கூட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்ததால் வழக்கத்தை விட கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
வரும் 22-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இதனால் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் பக்தர்களின் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமான 5 நாள் பூஜை இம்முறை 3 நாளாகக் குறைக்கப்பட்டதால், குறைந்த காலத்திற்குள் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரிசனத்தை முடித்து வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணத்துடன் பலர் சபரிமலைக்கு வந்திருந்தனர். இதனால் நேற்று நிலக்கல், பம்பை, நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். பொதுவாக மாதாந்திர பூஜை நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டம் காணப்படாது; ஆனால் இம்முறை பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சில ஐயப்ப பக்தர்கள் தெரிவித்ததாவது: “சபரிமலையில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அதிகமான பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஒழுங்கமைப்புடன் தேவையான வசதிகளை செய்ய அரசு முன்வர வேண்டும்,” என்றனர்.