கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் காருக்கு காலணி: பரபரப்பு நிலை
கர்நாடகாவில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு விலை ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி, கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் கூட்டத்தை கலைத்து செல்லுமாறு கேட்டதும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில விவசாயிகள் போலீசாரின் மீது மற்றும் வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் தடியடி செய்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுப்பட்டது.
இந்த கல்வீசி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். 3 அரசு பேருந்துகள் மற்றும் 4 லாரிகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதோடு, கர்நாடக வேளாண் அமைச்சர் சிவானந்த் பாட்டீல் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தபோது, சில விவசாயிகள் அவரது காரின் மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.