‘நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘நாயகன்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கெதிராக எஸ்.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவன உரிமையாளர் எஸ்.ஆர். ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில்,
“எனது நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ‘நாயகன்’ படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இதை மறைத்து, வி.எஸ். ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மறு வெளியீடு செய்துள்ளது. இது சட்ட விரோதமானது. எனவே, ரீரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்; வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார்.
இதற்கிடையில், வி.எஸ். ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்,
“படத்தை மறுவெளியிட அதிகாரபூர்வ ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது; காப்புரிமை மீறல் எதுவும் இல்லை,” என்று வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி என். செந்தில்குமார்,
“திரைப்பட வெளியீட்டை தடை செய்ய தேவையில்லை,” என்று கூறி மனுவை நிராகரித்தார். அதேசமயம், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளார்.