சபரிமலை பெருவழிப் பாதை நவம்பர் 17-ல் திறப்பு – வனப்பாதை தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவம்பர் 17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, வனப்பாதை தூய்மைப் பணி இன்று வழிபாடுகளுடன் தொடங்கியது.
அய்யப்பன் கோயிலின் மண்டல பூஜைக்கான நடை நவம்பர் 16-ஆம் தேதி மாலை திறக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17-ஆம் தேதி முதல் மண்டல வழிபாடுகள் நடைபெறவிருக்கின்றன. பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவின் மூலம் மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
மாதாந்திர வழிபாட்டின்போது வனப்பாதை வழியே பக்தர்களுக்கான அனுமதி வழங்கப்படாது. ஆனால், மண்டல காலம் தொடங்க இருப்பதால், இம்முறை பாரம்பரிய பெருவழிப்பாதைகளான எருமேலி–கல்லக்கட்டி, வண்டிப் பெரியாறு–சத்திரம் போன்ற வனப்பாதைகள் வழியே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பதிவின் போது, பக்தர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பாதையையும் குறிப்பிட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையிலே அந்தந்த வனப்பாதை வழியே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
வனத்துறை, பெருவழிப்பாதைகளை நவம்பர் 17-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக கரிமலை பகுதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பாதை சுத்தம் மற்றும் சீரமைப்புப் பணிகள் இன்று (நவம்பர் 6) தொடங்கின.
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“கடந்த ஜனவரி மாத மகர பூஜையின் போது வனப்பாதை திறக்கப்பட்டது. அதன்பின் சுமார் 10 மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் புதர்கள் மண்டி, பாதைகள் சிதிலமடைந்துள்ளன. எனவே தற்போது சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.”
இந்நிலையில், தரிசனத்துக்கும் பெருவழிப்பாதை பயணத்துக்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட வரம்பு நிறைந்ததும், அதற்குப் பிறகு அந்த நாளுக்கான முன்பதிவு மூடப்படும் எனத் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தங்கள் பயணத் திட்டத்திற்கு ஏற்ப விரைவாக நாட்களை தேர்வு செய்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது